புகார் பெட்டி செய்தி எதிரொலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் 5-வது வார்டு பிள்ளையார் கோவில் தெரு அரசு மாணவர்கள் விடுதி மற்றும் அங்கன்வாடி மையம் அருகே உள்ள வாறுகால் கடந்த சில ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாக `தினத்தந்தி' புகார் பெட்டிக்கு வாசகர் திருக்குமரன் அனுப்பிய பதிவு பிரசுரமானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாறுகால் சுத்தம் செய்யப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
மின்விளக்கு வசதி தேவை
கடையம் யூனியன் மேல ஆம்பூர் பஞ்சாயத்து கீழாம்பூர் ரெயில்வே கேட் அருகில் கருத்தப்பிள்ளையூருக்கு வரும் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் போதிய மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் பெண் பயணிகள் அவதிப்படுகிறார்கள். எனவே பயணிகள் நலன் கருதி மின்விளக்கு வசதி அமைத்து தர வேண்டும்.
-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.
பராமரிப்பு இல்லாத கட்டிடம்
செங்கோட்டை நகரசபை முத்துசாமி பூங்காவில் வானொலி நிலைய கட்டிடம் உள்ளது. இது கேரள மாநிலத்துடன் செங்கோட்டை இருந்தபோது 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பொழுதுபோக்குவதற்காக பூங்காவுக்கு வரும் மக்களுக்காக தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை செய்திகள் மற்றும் பாடல்கள் இரவு 9 மணிவரை ஒலித்துக் கொண்டே இருக்கும். நாளடைவில் இந்த வானொலி கட்டிடத்தில் உள்ள வானொலியை அதாவது ரேடியோவை நகராட்சி நிர்வாகம் எடுத்து விட்டது. பூங்காவும் பொலிவிழந்து விட்டது. அதன்பிறகு இந்த கட்டிடத்தை பயன்படுத்தாமல் பராமரிப்பு இல்லாமல் நாளடைவில் பழுதடைந்து கிடக்கிறது. இதன் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு விஷசந்துக்கள் நடமாட்டம் உள்ளது. இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் கூடாரமாக மாறிவிட்டது. எனவே கட்டிடத்தை சீரமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கனியமுதன். செங்கோட்டை
குப்பைகளை அகற்ற வேண்டும்
குற்றாலத்தில் திருகுற்றாலநாதர் கோவில் உள்ளது. கோவிலை சுற்றிலும் உள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் ஆங்காங்கே குப்பை மேடாக காட்சியளிக்கிறது, இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தர், குற்றாலம்.
சாக்கடை நீரால் நோய் அபாயம்
சேர்வைக்காரன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாரதி நினைவு நகரில் உள்ள தண்ணீர் தொட்டி பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. குழாய்கள் உடைந்து செடிகள் நிறைந்துள்ளன. அருகில் சாக்கடை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருள், கடையம்.