புகார் பெட்டி

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

Update: 2022-06-16 21:05 GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பஸ் வசதி தேவை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் உள்ள எஸ்.காவனூர் பகுதியில் புதிதாக பஸ் நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் பெண்கள், முதியோர்கள், மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே எஸ்.காவனூரில் அரசு பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதார சீர்கேடு

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே ஊர்கோவில் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தேங்கிய கழிவுநீரால் வாகனங்கள் அப்பகுதியில் செல்ல முடியாத நிலை உள்ளது. கொசுக்கள் அதிக அளவில் கழிவுநீரில் உற்பத்தியாவதால் தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

பொதுமக்கள் சிரமம்

மதுரை மீன் மார்க்கெட் காயிதே மில்லத் நகர் 1-வது தெருவில் பதிப்பதற்காக சாலையோரத்தில் வைக்கப்பட்ட கட்டுமான பொருட்களை சாலை பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும் அப்புறப்படுத்தாமல் உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பொருட்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்து அபாயம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள பாதாள சாக்கடை வேலை முடிந்தும் அதன் மூடி சரியாக மூடாமல் திறந்தபடி உள்ளது. இதனால் சாலையில் செல்பவர்களுக்கும் வாகன ஓட்டிகளும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்டும் முன்னர் இந்த பாதாள சாக்கடை மூடியை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் வசதி வேண்டும்

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என ஏராளமான ெபாதுமக்கள் வருகிறார்கள். இவர்களுக்கு இங்கு வைக்கும் குடிநீர் போதுமானதாக இல்லை. இதனால் இவர்கள் அனைவரும் தாகத்துடன் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

சேதமடைந்த குடிநீர் தொட்டி

மதுரை திருநகர் பகுதி மஹாலெட்சுமி காலனி ராதாகிருஷ்ணன் தெருவில் குடிநீர் வால்வு தொட்டியின் மூடிகள் உடைந்து திறந்த நிலையில் காணப்படுகிறது. இந்த பகுதியில் ஏராளமான குழந்தைகள் மற்றும் மக்கள் வசிக்கின்றனர்.இந்த திறந்த தொட்டியினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க சிரமப்படுகின்றனர். எனவே சேமடைந்த மூடிகளை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தண்ணீர் பற்றாக்குறை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட முத்துசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வினியோகிக்கப்படும் குடிநீரும் போதுமானதாக இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் வாரத்தின் அனைத்து நாட்களும் சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாய்கள் ெதால்லை

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றது. இதனால் குழந்தைகள், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்