குப்பைகள் அகற்றப்பட்டது
நாகர்கோவில் சற்குண வீதியில் வறீது தெரு உள்ளது. இந்த தெருவில் இரவு நேரம் வேறு பகுதியில் உள்ள சிலர் வீடு, கடைகளில் இருந்து கழிவுகளை சாலையோரம் கொட்டி விட்டு சென்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டதுடன், குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாசகம் அடங்கிய பேனரையும் சுவற்றில் ஒட்டியுள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டாரம் உள்ளது. இந்த ஊரின் மேற்கு புறத்தில் அகஸ்தியர் புதுகுளம் உள்ளது. இந்த குளத்தில் தாமரைகொடிகள் அதிகளவில் படா்ந்துள்ளன. இதனால், குளத்தில் சூரிய ஒளி உட்புக முடியாததால் தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் உள்ள தாமரை கொடிகளை அகற்றி தண்ணீர் மாசடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.
எரியாத மின்விளக்கு
கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னக்குறிச்சி நடுவூரில் சாைலயோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீமான், நடுவூர்.
பஸ் வசதி தேவை
கருங்கல் பகுதியில் இருந்து குளச்சல், திங்கள்சந்தை, குருந்தன்கோடு, கோணம், ஆசாரிபள்ளம் வழியாக நாகர்கோவிலுக்கு தடம் எண் 7, 12 H, 12 N ஆகிய பஸ்கள் இயங்கி வந்தன. தற்போது இந்த பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாணவ, மாணவிகளின் நலன்கருதி நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், ராமநாதபுரம்.
விபத்து அபாயம்
தென்தாமரைகுளம் ஆண்டிவிளை சந்திப்பு முதல் மேற்கு கடற்கரை வரை செல்லும் வெங்கலராஜன் கோட்டை சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருவதுடன் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோனி மோசஸ், தென்தாமரைகுளம்.
மின்கம்பம் மாற்றப்படுமா?
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நன்றிகுழி ஊர் உள்ளது. இந்த ஊரில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் மின் கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவாா்களா?.
-காளியப்பன், இறச்சகுளம்.
வீணாகும் குடிநீர்
பருத்திவிளை சந்திப்பில் இருந்து ஈத்தாமொழிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஆடராவிளை குடிநீர் தொட்டிக்கு வடக்கு புறமாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக ஆழ்துளை கிணற்றுடன் இணைப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. எனவே, குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துக்குமார், ஆடராவிளை.
சேதமடைந்த சாலை
திங்கள்சந்தையில் இருந்து அழகன்பாறை வழியாக பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டதால் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு உடைப்பு சீரமைக்கப்பட்டது. ஆனால் சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் முறையாக சீரமைக்காப்படாததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ெபரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயக்குமார், அழகன்பாறை.