புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினமும் பஸ் இயக்க வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து சாத்தனூர் செல்லும் 21 எண் கொண்ட அரசு பஸ் மூலம் வாதவனூர், பஞ்சனூர் உள்ளிட்ட ஏராளமான கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால் இந்த பஸ் அடிக்கடி வருவதில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பஸ்சை தினமும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணமூர்த்தி, பரமக்குடி.
வாகன ஓட்டிகள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் இருந்து சுற்றி உள்ள கிராமங்களை, ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் சாலை வாகன ஓட்டிகள் பயணிக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்வோர் சிரமப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், கடலாடி.
சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் நகரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் வாசலில் அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை முற்றிலும் சேதமடைந்து அடிப்பகுதியில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிவதால் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கின்றன. நடந்து செல்லும் நோயாளிகள் தரையில் உள்ள கம்பியில் தட்டி, தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி தீர்வுகாண வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
பஸ் இயக்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் தாலுகா செவ்வாய்பேட்டை பஞ்சாத்து சிறுகுடி கிராமத்திற்கு தேவகோட்டையில் இருந்து பல வருடங்களாக டவுண் பஸ் இயக்கப்பட்டது. தற்போது சிறுநல்லூரில் இருந்து சிறுகுடி செல்லும் தார்சாலை சேதமடைந்து காணப்படுவதால் பஸ் இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைப்பதுடன், பஸ் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதன், ராஜசிங்கமங்கலம்.
குளம் தூர்வாரப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள வண்ணாங்குன்டு பகுதியில் ஐயங்கோவில் குளம் தூர்வாரமல் உள்ளது. இதனால் குளத்தில் தண்ணீர் சேமிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தை தூர்வார வேண்டும்.
முருகன் பொண்ணையா, வண்ணாங்குன்டு.