'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளைபார்க்கலாம்.
'தினத்தந்தி'க்கு நன்றி
ஒட்டன்சத்திரம் தாலுகா சிந்தலைப்பட்டியில் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து அந்த மின் கம்பம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதற்காக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், 'தினத்தந்தி'க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
-ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.
தெருவில் ஓடும் சாக்கடை
தேனி அல்லிநகரம் 3-வது வார்டு சரவணகுடில் தெருவின் நுழைவுவாயிலில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து விட்டது. இதனால் கால்வாய் நிரம்பி கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த கால்வாயை சீரமைக்க வேண்டும்.
-நாராயணன், அல்லிநகரம்.
சேதமடைந்த மின் கம்பம்
திண்டுக்கல் ஏ.எம்.சி. ரோட்டில் பூ மார்க்கெட் எதிரே சேதம் அடைந்த மின்கம்பம் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்தோடு அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.
-குமார், திண்டுக்கல்.
நோய் பரவும் அபாயம்
ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை முன்புள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வாரி சரிசெய்ய வேண்டும்.
-தனசேகரன், ஆண்டிப்பட்டி.
குடிநீர் வினியோகம் பாதிப்பு
திண்டுக்கல் கஸ்தூரிநாயக்கன்பட்டியில் குடிநீர் மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் காவிரி கூட்டு குடிநீரும் வரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மோட்டாரை பழுதை நீக்கி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொது மக்கள், கஸ்தூரிநாயக்கன்பட்டி.
குவிந்து கிடக்கும் மது பாட்டில்கள்
பழனி பஸ் நிலையம் அருகே பாரதிதாசன் சாலையில் ரேஷன்கடை முன்பு மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலித்தீன் பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியே குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
-சரவணன், பழனி.
சாலை ஓரத்தில் குப்பைகள்
திண்டுக்கல்-திருச்சி சாலையில் என்.ஜி.ஒ. காலனியில் சாலை ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதில் பிளாஸ்டிக் குப்பைகள், துர்நாற்றம் வீசும் கழிவுகளும் உள்ளன. இந்த குப்பைகள் காற்றில் பறந்து சாலை முழுவதும் பரவுகிறது. எனவே குப்பைகளை அகற்றுவதோடு, சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், என்.ஜி.ஓ.காலனி.
குண்டும், குழியுமான தெரு
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் வி.ஐ.பி.நகரில் சிவன்கோவில் அமைந்துள்ள தெரு சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு தெரு மோசமாக உள்ளது. இந்த தெருவில் சாலை அமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், வி.ஐ.பி.நகர்.
குப்பைகளை பிரிக்கும் எந்திரம் பழுது
கம்பம் நகராட்சியில் கூடலூர் சாலையில் அமைந்துள்ள நகராட்சி உரக்கிடங்கில் குப்பைகளை பிரிக்கும் எந்திரம் பழுதாகிவிட்டது. இதனால் அங்கு குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கிறது. எனவே நகராட்சி நிர்வாகம் பழுதடைந்த எந்திரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -
ஊர் பொதுமக்கள், கம்பம்.