சிறுவனை கடத்த முயன்றதாக முதியவர் மீது புகார்
குளித்தலையில் சிறுவனை கடத்த முயன்றதாக முதியவர் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
கடைக்கு சென்ற சிறுவன்
குளித்தலை பெரியபாலம் பகுதியில் ஒரு சிறுவன் கடைக்கு சென்றான். அப்போது அந்த வழியாக சென்ற முதியவர் ஒருவர் அந்த சிறுவனை பிடித்து இழுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் அவரிடம் இருந்து தப்பி அங்குள்ள இளைஞர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற இளைஞர்கள் அந்த முதியவரை பிடித்து தாக்கியுள்ளனர்.
இதனால் அந்த முதியவர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள் அந்த முதியவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணான பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் குளித்தலை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விசாரணை
இதையடுத்து, அங்கு வந்த போலீசார் அந்த முதியவரை குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் அந்த முதியவர் யார்? அவர் உண்மையிலேயே அந்த சிறுவனை கடத்த முயற்சித்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற சிறுமியை சைக்கிளில் வந்த முதியவர் ஒருவர் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் நடந்துள்ளது.
எனவே சிறுமியை கடத்த முயன்ற அந்த முதியவர் தான் இவரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.