மூதாட்டி சாவில் சந்தேகம் இருப்பதாக தம்பி மீது புகார்

குடியாத்தம் அருகே இறந்த மூதாட்டியின் சாவில், தம்பி மீது சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

Update: 2023-10-25 17:38 GMT

மூதாட்டி சாவு

குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி வலசை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. முன்னாள் ராணுவவீரரான இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி கனகம்மாள் (வயது 84). இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி, கோபி, குமார், அசோகன் என்ற நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தி ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார், கோபி சூராளூரில் வசித்து வருகிறார். குமாருக்கு இன்னும் திருமணமாக வில்லை. அசோகன் குடியாத்தத்தில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் வேலைபார்த்து வருகிறார்.

கல்லப்பாடிவலசை கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி ஒரு பகுதியிலும், தாயார் கனகம்மாள் ஒரு வீட்டிலும், குமார் ஒரு பகுதியிலும் வசித்து வந்தனர். கடந்த சனிக்கிழமை கனகம்மாள் இறந்து விட்டார். அவரது உடலை திங்கட்கிழமை தகனம் செய்துள்ளனர்.

தம்பி மீது புகார்

இந்தநிலையில் தனது தாய் கனகம்மாளின் சாவில், குமார் மீது சந்தேகம் இருப்பதாக கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது சகோதரர்கள் பரதராமி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் குமார் அடிக்கடி குடித்துவிட்டு தாயாருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், நண்பருடன் சேர்ந்து தாயாரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பரதராமி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்