பணியில் இருந்து நீக்க கோரி பேனர் வைத்தவர்கள் மீது ஊராட்சி செயலர் புகார்போலீசார் விசாரணை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் வி.கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 45). இவர் வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் செயலராக பணிபுரிந்து வருகிறார். இவரை பணியில் இருந்து நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் சிலர் தர்மபுரி- திருப்பத்தூர் சாலையில் நத்தம் பிரிவு சாலை பகுதியில் பொது இடத்தில் பேனர் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தன்ராஜ் இதுபற்றி கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனக்கு மன உளைச்சல் ஏற்படும் வகையில் பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.