அரசு பள்ளி மாணவர்களுக்கான போட்டித்தேர்வு பயிற்சி முகாம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டித்தேர்வு பயிற்சி முகாமை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று தொடங்கி வைத்தார்.;

Update: 2022-06-01 14:15 GMT

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டித்தேர்வு பயிற்சி முகாமை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று தொடங்கி வைத்தார்.

பயிற்சி முகாம்

நாமக்கல் மாவட்டம் அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் "வானம் வசப்படும்" என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டித்தேர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

அரசு பள்ளி மாணவ, மாணவிகள் போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திகொள்ளும் வகையில் தமிழக அரசு வானம் வசப்படும் என்ற தலைப்பில் பயிற்சி முகாமினை தொடங்கி உள்ளது. அரசு பள்ளி மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வுகளில் எத்தகைய தயக்கமுமின்றி அரசுத்துறை வேலைவாய்ப்புகளை பெற்றிட இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

இத்திட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பு வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுனர்களை கொண்டு போட்டித்தேர்வுகளுக்கு எவ்வாறு தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், தேர்வுகளில் தங்கள் முழு திறமையையும் எவ்வாறு பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் இந்த முகாமை பயன்படுத்தி கொண்டு, தங்கள் இலக்கை அடைந்திட வேண்டும்.

இலக்கை அடைய வேண்டும்

கல்விக்கு பெற்றோரின் பொருளாதார நிலை ஒரு தடையல்ல என்பதை நீங்கள் உணர்ந்து, உங்களது கனவை நனவாக்கிட வேண்டும். மாணவ, மாணவிகள் தங்களது முழு ஈடுபாட்டையும், உழைப்பையும் படிப்பில் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் கனவை நிறைவேற்றும் இலக்கை அடைய இயலும். மாணவ, மாணவிகள் தங்களது ஒரே குறிக்கோள் படிப்பு மட்டுமே என்று மிகுந்த கவனத்துடன் படித்து தங்களது இலக்கை அடைய வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டி தேர்வு முகாமானது அடுத்த மாதம் (ஜூலை) 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமில் சிறப்பு பயிற்சி பெற நாமக்கல், திருச்செங்கோடு கல்வி மாவட்டங்களை சேர்ந்த 30 மாணவர்களும், 74 மாணவிகளும் என மொத்தம் 104 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மணிவண்ணன், கந்தசாமி, வேலம்மாள் ஐ.டி. பள்ளி முதல்வர் பிரபாகரன் உள்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்