கையகப்படுத்திய நிலத்தை பயன்படுத்தாவிட்டால் இழப்பீடு: வாக்காளர்களுக்கு இலவசங்களை கொடுக்க மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகின்றனர்- மதுரை ஐகோர்ட்டு கருத்து

வளர்ச்சி திட்டங்களுக்கு கையகப்படுத்திய நிலத்தை பயன்படுத்தாவிட்டால் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், வாக்காளர்களுக்கு இலவசங்களை கொடுக்க மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகின்றனர் என மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.;

Update:2023-10-25 02:08 IST


நிலம் கையகப்படுத்தல்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த பல பகுதிகளில் நிலம் அடையாளம் காணப்பட்டு அதனை கையகப்படுத்தி கடந்த சில (2010-வது ஆண்டு முதல்) ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இருப்பினும் கையகபடுத்திய நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு, திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. எனவே, தமிழக நகர் மற்றும் நகரமைப்பு சட்டப்படி நிலங்களை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நில உரிமையாளர்கள் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மக்களின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு அவர்களுக்கான, வசதியை ஏற்படுத்தி தரும் நோக்கில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களில் தங்குமிடம், வாழ்வாதாரம், சுகாதாரம், தூய்மையான காற்று மற்றும் குடிநீர் ஆகியன பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமையாகும். நிலம் கையகப்படுத்தும் நடைமுறை முடியும் வரை எந்த வளர்ச்சி திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. ஒருவரிடம் இருந்து கையகப்படுத்திய சொத்தை பல வருடங்களாக பயன்படுத்தாமல் இருப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதற்கு அரசு பதில் சொல்லியாக வேண்டும். சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் யாருடைய சொத்தையும் கையகப்படுத்த முடியாது. பொது நோக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு உண்டு. அதே நேரத்தில், அவர்களுக்கான இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் விதிமுறைகள் உள்ளன.

இழப்பீடு, அபராதம்

மனுதாரர்களின் நிலங்களை அரசு கையகப்படுத்தி எந்த வளர்ச்சி திட்டத்தையும் செயல்படுத்தாமல் இருப்பதால், உரிமையாளர்கள் நிலத்தை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். இது தொடர்பாக சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டில் நூற்றுக்கணக்கில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. பின்னர் அந்த நிலங்கள் உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்படுகிறது. அதன்படி, அரசு வளர்ச்சித்திட்டங்களை முழுமையாக செயல்படுத்துகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு அறிவித்த பெரிய திட்டங்கள் என்ன, அதில் மண்டல வாரியான திட்டங்கள் எத்தனை, வளர்ச்சி திட்டங்கள் எந்தளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து நகர் மற்றும் நகரமைப்பு இயக்குனர் பதிலளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும், எந்த பதிலும் தாக்கல் செய்யப்படவில்லை. 2023-ல் இந்த நிலை எனில் 2033-ல் என்ன ஆகும் என்பது தெரியவில்லை. இந்த வழக்கில் மனுதாரர்களின் நிலங்களை கையகப்படுத்தி வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தவில்லை, அதற்கான இழப்பீடும் வழங்க வில்லை. மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்ய வரிகளை வசூலிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.

அபராதம்

ஆனால், அரசுகள் பொதுமக்களின் நலனில் அக்கறையின்றி, வாக்காளர்களுக்கு இலவசங்களை கொடுக்க வரிப்பணத்தை வீணாக்குகின்றனர். எனவே, இந்த வழக்கில், மனுதாரர்களின் நிலம் வளர்ச்சி திட்டங்களுக்கான பணிகளில் இருந்து விடுவிக்கப்படுகிறது. இதற்காக நில உரிமையாளர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் பதில்மனு தாக்கல் செய்யாத நகர் மற்றும் நகரமைப்பு துறை இயக்குனருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்