முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கருணை-கல்வி உதவித்தொகை உயர்வு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கருணை-கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2022-11-19 17:58 GMT

தமிழக கவர்னர் தலைமையில் நடைபெற்ற தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழு கூட்டத்தில் போர், போரையொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளியான (ஊனமுற்ற) முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் கருணை தொகை, கல்வி உதவித்தொகை இந்த நிதி ஆண்டில் இருந்து உயர்த்தப்பட்டு வழங்கப்படவுள்ளது. அதன்படி, போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தோரை சார்ந்த அவரது மனைவி மற்றும் பெற்றோருக்கு வழங்கப்பட்டு வந்த கருணை உதவித்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்ந்துள்ளது. போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் மாற்றுத்திறனாளியான முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கருணை தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர் சிறார் கல்வி மேம்பாட்டு நிதியுதவி (கல்வி உதவித்தொகை) மூலம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2 ஆயிரமும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.4 ஆயிரமும், 9, 10-ம் வகுப்புகளுக்கு ரூ.5 ஆயிரமும், 11, 12-ம் வகுப்புகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவர்தம் கைம்பெண்களின் சிறார்கள் சைனிக் பள்ளியில் பயில்வதற்கு ஊக்கத்தொகை ரூ.25 ஆயிரமும், முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவர்தம் கைம்பெண்களின் சிறார்கள் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.எஸ். -தேசிய சட்டப்பள்ளிகளில் பயில்வதற்கு ஊக்கத்தொகை ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது. அதன்படி அரியலூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவரை சேர்ந்தவர்கள் கருணை தொகை, கல்வி உதவித்தொகை பெற்று பயனடையலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர் நல அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்