திருமாவளவனுக்கு "சமூகநீதி காவலர் காயிதே மில்லத் விருது"
காயல்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் திருமாவளவனுக்கு "சமூகநீதி காவலர் காயிதே மில்லத் விருது" வழங்கப்பட்டது.;
திருச்செந்தூர்:
காயல்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு 'சமூகநீதி காவலர் காயிதே மில்லத் விருது' வழங்கப்பட்டது.
திருமாவளவனுக்கு விருது
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் காயல் சமூகநீதி பேரவை சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு சமூகநீதி காவலர் காயிதே மில்லத் விருது வழங்கும் விழா நடந்தது. விழாவில் பேரவை தலைவர் முஹம்மது அலி தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சி முன்னாள் தலைவர் வஹீதா அப்துல் காதர் வரவேற்று பேசினார். பச்சை தமிழகம் கட்சி தலைவர் உதயகுமார், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீது, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்ட நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, தொல் திருமாவளவனுக்கு 'சமூகநீதி காவலர் காயிதே மில்லத் விருது' வழங்கினார்.
திராவிட மாடல்
பின்னர் திருமாவளவன் பேசியதாவது:-
ஒரு அரசு மதம், இனம், மொழி சார்ந்து இருக்கக் கூடாது. அரசு அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். மேலும் சமூக நீதி காக்கப்பட வேண்டும். தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் சமூகநீதிக்கானது. சகிப்புத்தன்மையை பேசுவது திராவிட மாடல், சகிப்புத்தன்மையின்மையை பேசுவது ஆரிய மாடலாகும். வருகின்ற 2024-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் சூழல் மாறுபடும்' என்றார்.
நிகழ்ச்சியை பேரவை செயலாளர் அஹமது சாஹிபு தொகுத்து வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், நேர்முக உதவியாளர் முத்தமிழ் பாண்டியன், மண்டல செயலாளர் தமிழினியன், மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் சங்கதமிழன், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி, மாவட்ட துணை அமைப்பாளர் இளந்தளிர் முத்து, நகர செயலாளர்கள் அகமது அல்லமின், வெள்ளத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரவை துணை செயலாளர் மூஸா நெய்னா நன்றி கூறினார்.