இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.;
நாகர்கோவில்:
மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 3 நாட்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பா.ஜனதா ஆட்சியில் ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறியும், எனவே அதற்கு கண்டனம் தெரிவித்தும், விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் மாநில செயலாளா் பாரதி, முன்னாள் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து மற்றும் நிர்வாகிகள் நேற்று நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கி முன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 பேர் கைது
மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியபடி இந்த மறியல் போராட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து அங்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் உடனடியாக சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அந்த வகையில் மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
சாலை மறியல் போராட்டம் காரணமாக கேப் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து ஒழுங்குபிாிவு போலீசார் அதை சரிசெய்தனர்.