ராமநாதபுரம் நகராட்சிக்கு ரூ.8 கோடி வரிபாக்கி

ராமநாதபுரம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய ரூ.8 கோடி வரிபாக்கி உள்ளதால் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

Update: 2023-02-25 18:45 GMT

ராமநாதபுரம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய ரூ.8 கோடி வரிபாக்கி உள்ளதால் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

வரி நிலுவை

ராமநாதபுரம் நகராட்சிக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் செலுத்த வேண்டிய சொத்துவரி ரூ.3 கோடியே 33 லட்சத்து 44 ஆயிரம், காலியிட வரி ரூ.12 லட்சத்து 66 ஆயிரம், தொழில் வரி ரூ.64 லட்சத்து 34 ஆயிரம், குடிநீர் கட்டணம் ரூ.1 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரம், பாதாள சாக்கடை கட்டணம் ரூ.2 கோடியே 16 லட்சத்து 35 ஆயிரம், கடை வாடகை ரூ.45 லட்சத்து 46 ஆயிரம் என நகராட்சிக்கு வருவாயாக வரவேண்டிய மொத்தம் ரூ.8 கோடியே 4 லட்சத்து 95 ஆயிரம் செலுத்தப்படாமல் நிலுவையாக உள்ளது.

இதன் காரணமாக நகராட்சியில் பொதுமக்களின் அத்தியாவசிய அடிப்படை வசதி பணிகளை செய்ய முடியாத நிலை உள்ளது. போதுமான வரிவசூல் நிதி ஆதாரம் இல்லாததால் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஆணையாளர் எச்சரிக்கை

ஒரு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை உள்ள முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள 2-வது அரையாண்டிற்கான சொத்து வரியை அக்டோபர் 31-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஏற்கனவே வரி செலுத்துவதற்கான காலவரையறை கடந்து விட்டதால், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் இந்த மாத இறுதிக்குள் வரிகளை செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இதற்காக நகராட்சி கணினி வரி வசூல் மையம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கி வருகிறது. இதன் பின்னரும் வரி செலுத்தாதவர்களின் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் பொறுப்பு லெட்சுமணன் எச்சரித்து உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்