சிறுவர் சீர்திருத்த பள்ளிகளை கள ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க வேண்டும் - வைகோ

சிறுவர் சீர்திருத்த பள்ளிகளை கள ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.;

Update:2023-01-18 18:25 IST

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தாம்பரம் கன்னடபாளையம் குப்பை மேடு பகுதியை சேர்ந்த பிரியாவின் மூத்த மகன் கோகுலை, ரெயில்வே போலீசார் சந்தேகத்தின் பெயரில் பிடித்து இருக்கிறார்கள். மேலும் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி இருக்கிறார்கள். கடந்த டிசம்பர் 31-ந்தேதி அவரது மகன் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் இறந்து விட்டதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

மருத்துவ அறிக்கையில் சிறுவன் கோகுல் கொடூரமாக அடித்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளி கண்காணிப்பாளர் உள்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இதில் பாராபட்சமற்ற நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்த தமிழக போலீசாரின் பணி பாராட்டுக்குரியது.

இந்த வழக்கை சட்டம்-ஒழுங்கு காவல்துறையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும். கணவனை இழந்து 5 குழந்தைகளுடன் ஆதரவற்ற நிலையில் உள்ள விதவைத் தாய் பிரியாவிற்கு தகுந்த பாதுகாப்பும், அவரின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்பும், நிவாரணமும் வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிகளை கள ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்