வணிகவரித்துறை சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் வணிகவரித்துறை சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்;
விழுப்புரம்
அரசாணை வெளியிட்டும் 1,000 துணை மாநில வரி அலுவலர் பதவி உயர்வில் தாமதம் செய்வதை கண்டித்தும், கோட்ட மாறுதல், அறிக்கைகள் கேட்பதை முறைப்படுத்துதல், விஞ்ஞானப்பூர்வமற்ற இலக்கை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு முழுவதும் வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிதலும் மற்றும் மதிய உணவு இடைவேளையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சிவக்குமார், உதவி ஆணையர் மாநில வரி அலுவலர் சங்கத்தின் நிர்வாகி செல்வகணபதி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் விழுப்புரம் வணிகவரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சரக அலுவலகங்களிலும் வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றியதோடு ஆர்ப்பாட்டமும் செய்தனர்.