இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி பணி தொடக்கம்

வேதாரண்யத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி பணி தொடங்கியது. இலக்கை எட்ட உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-12-31 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி பணி தொடங்கியது. இலக்கை எட்ட உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

9 ஆயிரம் ஏக்கர்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சிறு உப்பு உற்பத்தியாளர்கள் 850 பேர் 3 ஆயிரம் ஏக்கரில் உணவு உப்பு தயார் செய்து வருகின்றனர்.

மீதம் உள்ள 6 ஆயிரம் ஏக்கரில் கோடியக்காடு, கடினல்வயல் பகுதியில் தொழிற்சாலைக்கு தேவையான உப்பை பெரிய நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. ஆண்டுதோறும் இங்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

உப்பு உற்பத்தி பணி

கடந்த மாதம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்ததால் உப்பு பாத்திகளில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக உப்பளத் தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்து வீட்டில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு பிறகு வேதாரண்யம் பகுதியில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

இதை தொடர்ந்து உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு இந்த ஆண்டுக்கான(2023) உப்பு உற்பத்தி பணி தொடங்கப்பட்டுள்ளது. உப்பு உற்பத்திக்கான முதல் கட்ட பணிகளான பாத்தி அமைத்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இலக்கை எட்ட....

கடந்த ஆண்டு(2022) உப்பிற்கு நல்ல விலை இருந்தும் மழை காரணமாக உற்பத்தி இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் இந்த ஆண்டுக்கான(2023) உப்பு உற்பத்தி இலக்கை எட்டுவதற்கு இரவு, பகல் பாராமல் உற்பத்தியாளர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு போல உப்பு பாத்திகளை சரி செய்வதற்கு மண் அடிக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமடைந்்து வருகின்றனர்.

மண் எடுக்க அனுமதிக்க கோரிக்கை

பாத்திகளில் உள்ள மணலையே எடுத்து புதிதாக உருவாக்கப்படும் பாத்திகளுக்கு போட்டு சரி செய்கின்றனர். புதிதாக மண் அடிக்க முடியாத நிலையில் பழைய மண்ணை போட்டு பாத்திகளை தயார் செய்வதால் உப்பு வெள்ளையாக இருக்காது என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உப்பளங்களுக்கு மட்டுமாவது மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்