பெருங்குடல் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு கையேடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

அதிகரித்து வரும் பெருங்குடல் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு கையேட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

Update: 2023-05-18 01:12 GMT

இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் உலகமெங்கும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட்டு வருகிறது. எனவே, பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் வாழ்வியல் முறைகளான சரியான உடல் எடையை பராமரித்தல், முறையான தொடர் உடற்பயிற்சி, புகையிலை மற்றும் மது வகைகளை தவிர்த்தல், அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுதல், புற்றுநோய் முன்னெச்சரிக்கை பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் போன்றவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

உலக காஸ்ட்ரோலஜி அமைப்பு, தமிழ்நாடு காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டிரஸ்ட் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேட்டை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த நிகழ்வின்போது, அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ பணிகள் இயக்குநர் டாக்டர் வெங்கடாசலம், இரைப்பை குடல் நிபுணர் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் கே.ஆர்.பழனிசாமி, இரைப்பை குடல் மருத்துவ ஆலோசகர்கள் டாக்டர் பிரம்மநாயகம், டாக்டர் கார்த்திக் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு டாக்டர் கே.ஆர்.பழனிசாமி அளித்த பேட்டி வருமாறு:-

உலக இரைப்பை குடலழற்சி அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை முன்னிருத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கருத்தாக மலக்குடல் அல்லது பெருங்குடல் புற்றுநோயை (கோலான் கேன்சர்) முன்னிருத்தி இருக்கிறது. இந்த ஆண்டு முழுவதும் இந்த நோயைப் பற்றி டாக்டர்கள், மக்களிடையே இந்த அமைப்பு, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை உலகளவில் நடத்துகிறது.

நம் ஊர்களில் பெருங்குடல் புற்றுநோய் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது அது அதிகமாகி வருகிறது. 40 முதல் 50 வயதுக்கு இடைபட்டவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் அதிகமாக வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஏன் இதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றால், இது குணமாக்கப்படக்கூடிய நோய் என்பதால்தான். ஆனால் முதலிலேயே அதை கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

அமெரிக்காவில் கோலோனோஸ்கோப் என்ற பரிசோதனையை 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளது. ஏனென்றால், மலக்குடலில் காணப்படும் சிறு சிறு கட்டிகள்தான் புற்றுநோயாக மாறும். இந்த கட்டிகளை கோலோனோஸ்கோப் மூலமாக எடுத்துவிடலாம். அந்த வகையில் மலக்குடல் புற்றுநோயை தடுத்துவிடலாம்.

இந்த நோய் வந்தாலும் குணமாக்க முடியும் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இங்கு நடத்த இருக்கிறோம். அதற்கான விழிப்புணர்வு பிரசார கையேட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். உலக இரைப்பை குடலழற்சி அமைப்பு, தமிழ்நாடு இரைப்பை குடலழற்சி அறக்கட்டளை மற்றும் அப்பல்லோ மருத்துவமனை ஆகியவை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறோம்.

மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெருங்குடல் புற்றுநோய் மிகவும் சாதாரணமாக உள்ளது. காரணம், அங்குள்ள உணவு பழக்க வழக்கங்கள்தான். நம் ஊரில் இது முன்பு மிகக் குறைவாகவே காணப்பட்டது.

ஆனால் தற்போது இங்கும் நொறுக்கு தீனி உள்ளிட்ட உணவு பழக்க வழக்கங்களில் அதிக மாற்றங்கள் வந்துவிட்டன. உடற்பயிற்சி செய்வதில்லை. இப்படி பழக்க வழக்கங்கள் மாறி வருவதால் இங்கும் பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. அதாவது மேலை நாடுகளுக்கு இணையாக இங்கும் பெருங்குடல் புற்றுநோய் அதிகமாக உள்ளது. தற்போது 30 முதல் 40 சதவீதம் வரை இங்கு பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்