மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ராணுவ வீரர் பலி

சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் ராணுவ வீரர் பலியானார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-06-15 18:45 GMT

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூரை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி மகன் சரவண கார்த்திக் (வயது 26). இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர் நேற்று முன்தினம் இரவு சங்கரன்கோவிலில் இருந்து மேலநீலிதநல்லூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

நெல்லை சாலையில் நவநீதகிருஷ்ணாபுரம் விலக்கு பகுதியில் சென்றபோது, அவரது மோட்டார் சைக்கிளும், சின்ன கோவிலாங்குளத்தை சேர்ந்த மாதவகுமார், தங்கராஜ் ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் சரவண கார்த்திக் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் மாதவகுமார், தங்கராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னகோவிலாங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் இறந்த சரவண கார்த்திக் உடல் பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சரவண கார்த்திக்குக்கு அபிஷா என்ற மனைவியும், சஷ்டிகா என்ற மகளும் உள்ளனர். மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்