மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெட்ரோல் பங்க் ஊழியர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெட்ரோல் பங்க் ஊழியர் பலி
பட்டுக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதியதில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல் பங்க் ஊழியர்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆசாத் நகர் பகுதியை சேர்ந்தவர் காஜா அலாவுதீன் பாரூக் (வயது60). இவர், பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன்கோட்டையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு மீண்டும் பணிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்க்கு சென்று கொண்டிருந்தார். அப்போது துவரங்குறிச்சி மன்னாரங்கொல்லை பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக காஜா அலாவுதீன்பாரூக் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
விசாரணை
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காஜா அலாவுதீன் பாரூக் மனைவி நபீதா பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்ே்பரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.