மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் பலி

மேலகிருஷ்ணன்புதூர் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-07-16 18:45 GMT

மேலகிருஷ்ணன்புதூர், 

மேலகிருஷ்ணன்புதூர் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கணவன்-மனைவி

ஈத்தாமொழி அருகே உள்ள புத்தன்துறையை சேர்ந்தவர் பனிமையஜசிங்டன் (வயது53). இவர் கணபதிபுரத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை செய்து வந்தநிலையில் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இவருடைய மனைவி ஆரோக்கிய நிது (42). இவர்கள் நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் புத்தன்துறை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மேலகிருஷ்ணன்புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டெம்போவை முந்திக்கொண்டு ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மோட்டார் சைக்கிள், பனிமையஜசிங்டன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் பனிமையஜசிங்டன், அவருடைய மனைவி ஆரோக்கிய நிது மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த புத்தன்துறையை சேர்ந்த அண்ணன் தங்கையான 16 வயது சிறுவன், 12 வயது சிறுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 4 பேைரயும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ஆரோக்கியநிது பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து பனிமையஜசிங்டன், 12 வயது சிறுமி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 16 வயது சிறுவன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வழக்குப்பதிவு

இந்த விபத்து குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரனை நடத்தி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 16 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பகுதியில் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்