மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த கல்லூரி மாணவர்கள் திட்டம் - சென்னையில் போலீஸ் குவிப்பு

கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க அண்ணா நகர் மற்றும் கீழ்ப்பாக்கத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-07-21 04:50 GMT

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி மர்ம மான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்துக்கு நீதிகேட்டு கடந்த 17-ந்தேதி நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது.

இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு போராட பச்சையப்பா கல்லூரி மற்றும் கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வாட்ஸ் அப் குழு ஒன்றினை தொடங்கி உள்ளனர். அந்த குழுவில் 300-க்கும் அதிகமான மாணவர்கள் இணைந்துள்ளனர்.

இது குறித்த மாணவர்கள் விடுத்த அழைப்பில் , நமது தோழி ஸ்ரீமதிக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து பச்சையப்பன் கல்லூரி மற்றும் கொ.கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இந்த போராட்டத்திற்கு மாணவர்கள் தானாக வந்து திரள வேண்டும். காரணம் எந்த ஒரு சமூக அமைப்பு அல்லது அமைப்புடன் நடைபெறவில்லை. கல்லூரி மாணவர்களை முழுக்க முழுக்க ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள். மாணவர்கள் முழக்கத்தை மட்டுமே எழுப்ப வேண்டும். எந்த ஒரு வன்முறை செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் வெளியானதையடுத்து, போராட்டத்தில் மாணவர்கள் யாரும் ஈடுபடக்கூடாது எனவும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இந்த நிலையில், கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க அண்ணா நகர் மற்றும் கீழ்ப்பாக்கத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்