பொன்னேரி அருகே ஓடும் மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்
பொன்னேரி அருகே ஓடும் மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு மாணவர் படுகாயம் அடைந்தார்.;
சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரிகளில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, எளாவூர், ஆரம்பாக்கம், பொன்னேரி, அனுப்பம்பட்டு, மீஞ்சூர் போன்ற பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பட்ட படிப்பு பயின்று வருகின்றனர்.
இந்த மாணவர்கள் மின்சார ரெயிலில் சென்னைக்கு சென்று வரும் நிலையில் இவர்களுக்குள் தங்களில் யார் பெரியவர் என்ற ரூட் தல பிரச்சினையில் அடிக்கடி ரெயிலில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தாலும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கியும், கற்களை வீசியும் வன்முறை செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை சென்ட்ரலில் இருந்து சூளூர்பேட்டை செல்லும் மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்கள் ஏறி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் மின்சார ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.
இதையடுத்து பொன்னேரி ரெயில் நிலையத்தை கடந்த போது செல்லும் போது மாணவர்களுக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்து இரும்பு கம்பிகளால் ஒருவருக்கொருவர் பயங்கரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. ரெயில் பயணிகள் அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தும் முடியாக நிலையில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். அப்போதும் மாணவர்கள் ரெயிலில் இருந்து கீழே குதித்து கற்களை வீசி தாக்கிக்கொண்டனர்.
இந்த ரூட் தல மோதலில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மாநில கல்லூரி மாணவன் ராஜ்குமார் (வயது 21) பலத்த காயமடைந்தார். இவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது தாய் திலகவதி சென்னை கொருக்குப்போட்டை ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பொன்னேரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.k