கிண்டி ரெயில் நிலையத்தில் 'ரூட்' தல பிரச்சினையில் கல்லூரி மாணவர்கள் மோதல் - போலீசார் எச்சரித்து அனுப்பினர்
கிண்டி ரெயில் நிலையத்தில் ‘ரூட்’ தல பிரச்சினையில் 2 கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
சென்னை கடற்கரைக்கு செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து செல்லும் மின்சார ரெயில்களில் பச்சையப்பா மற்றும் நந்தனம் கல்லூரி மாணவர்கள் பயணிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இந்த 2 கல்லூரி மாணவர்கள் இடையே 'ரூட்' தல பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக கிண்டி ரெயில் நிலையத்தில் 2 கல்லூரியை சேர்ந்த மாணவர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கிண்டி போலீசார் விரைந்து சென்று பச்சையப்பா கல்லூரியை சேர்ந்த 15 மாணவர்களையும், நந்தனம் கல்லூரியை சேர்ந்த 6 மாணவர்களையும் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இனிமேல் 'ரூட்' தல பிரச்சினை செய்ய மாட்டோம் என எழுதி வாங்கிய போலீசார், பின்னர் எச்சரித்து அனுப்பினர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி இரு கல்லூரி நிர்வாகத்துக்கும் கிண்டி போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
வழக்கமாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களில்தான் கல்லூரி மாணவர்கள் இடையே இதுபோல் 'ரூட்' தல பிரச்சினை ஏற்படுவது வழக்கம்.
ஆனால் சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே மின்சார ரெயிலில் செல்லும் கல்லூரி மாணவர்கள் இதுபோல் 'ரூட்' தல பிரச்சினையில் மோதிக்கொண்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.