கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் கைது
சென்னையில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் தாம்பரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாலினி தமைமையிலான தனிப்படையினர் நேற்று பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் பல்கலைக்கழகம் அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கட்டபொம்மன்நகர், கணேஷ் அவென்யூவில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த பிரகாஷ்ராஜ்(வயது 21) என்பதும், பல்லாவரம் தனியார் பல்கலை கழகத்தில் 4-ம் ஆண்டு சட்டம் படித்து வருவதும், மற்றொருவர் விருத்தாசலத்தை சேர்ந்த சையது நசீர் பாஷா(22) என்பதும், பல்லாவரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் வருடம் படித்த இவர், செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்ததால் மீண்டும் தேர்வு எழுத நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி இருப்பதும் தெரிந்தது.
அவர்களது அறையில் சோதனை செய்தபோது 12 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா போதைக்கு அடிமையான இவர்கள், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்றதும் தெரிந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 12 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.