பிறந்த நாளில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை அருகே செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி பிறந்த நாளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாங்குநேரி:
நெல்லை அருகே செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி பிறந்த நாளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி
நெல்லை அருகே உள்ள மூன்றடைப்பை அடுத்த முதலைகுளத்தைச் சேர்ந்தவர் முருகன். அரசு பஸ் டிரைவர். இவருடைய மகள் சரோஜா (வயது 19). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வில் 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. எனவே அவரை பெற்றோர் கண்டித்தனர். இதனால் சரோஜா மனமுடைந்த நிலையில் இருந்தார்.
பிறந்த நாளில் தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் சரோஜாவுக்கு பிறந்த நாள் ஆகும். அன்று மதியம் அவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சரோஜா திடீரென்று துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் வீட்டுக்கு வந்த குடும்பத்தினர் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை அருகே செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெறாததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி பிறந்த நாளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.