பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்: 2 பேர் கைது
இருவர் மீதும் மானபங்கம், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவை,
திருவாரூரைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்துக்கு செல்ல தனியார் டவுன் பஸ்சில் வந்தார். அப்போது டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார்.
இதனால் நிலைதடுமாறிய அந்த மாணவி பஸ்சுக்குள் கீழே விழுந்தார். இதைப் பார்த்து பஸ்சில் இருந்த 2 பேர் அவரை கேலி செய்தனர். இதையடுத்து அந்த மாணவி, காந்திபுரம் பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து சென்றார்.
அப்போது அவரை, பின்தொடர்ந்து வந்த 2 பேர் அங்குள்ள கழிப்பிடம் அருகே மாணவியை தொட்டு சில்மிஷம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சல் போட்டார்.
இது குறித்து காட்டூர் போலீசில் அந்த மாணவி புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லமணி வழக்கு பதிவு செய்து மாணவியிடம் சில்மிஷம் செய்த அன்னூர் சத்தி ரோடு கோட்டை தோட்டத்தை சேர்ந்த அசோக் குமார் (வயது 34), ஆலாந்துறை பூலுவபட்டியை சேர்ந்த வெள்ளிமேடு ஆபிரகாம் பிலிப் (35) ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
இவர்களில் அசோக்குமார் என்ஜினீயராகவும், ஆபிரகாம் பிலிப் டிரைவராகவும் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் மீது மானபங்கம், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.