விபத்தில் கல்லூரி மாணவர் பலி; 5 பேர் படுகாயம்

கோவையில் செல்போன் கடைக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-06-13 17:17 GMT

கோவை, ஜூன்.14-

கோவையில் செல்போன் கடைக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். நண்பனின் பிறந்தநாள் விழாவுக்கு சென்று திரும்பியபோது இந்்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

நண்பனின் பிறந்தநாள் விழா

கரூர் மாவட்டம் செல்லாண்டிபாளையத்தையை சேர்ந்த கோபால் என்பவரின் மகன் ஓம்பிரகாஷ் (வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்தார். ஒம்பிரகாஷ் நேற்று முன்தினம் இரவு தனது நண்பனின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு, சிட்ராவில் இருந்து பீளமேட்டில் உள்ள விடுதிக்கு காரில் திரும்பினார்.

காரில் ஓம்பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களான திருப்பூரை சேர்ந்த தினேஷ்குமார் (23), ஆதித்யா சரவணன் (23), பிரதீப் (21), திருச்சியை சேர்ந்த பிரகதீஸ்வரன் (22), ஊட்டியை சேர்ந்த ரித்தீஸ் (21) ஆகியோர் இருந்தனர். காரை தினேஷ்குமார் ஓட்டினார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

செல்போன் கடையில் மோதியது

கார் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் கோவை-அவினாசி ரோட்டில் வந்து கொண்டிருந்தது. பீளமேடு அருகே வந்துபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த செல்போன் கடையின் முகப்பில் மோதி, கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கி அவர்கள் சத்தம் போட்டனர். இதை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கல்லூரி மாணவர் பலி

அங்கு சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் ஓம்பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த தினேஷ்குமார், ஆதித்யா சரவணன், பிரதீப், பிரகதீஸ்வரன், ரித்தீஸ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்