பஸ் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவி பலி- கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றபோது சோகம்
ஈரோட்டில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவியின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஈரோடு,
ஈரோடு அருகே நஞ்சனாபுரம் பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் கல்வி சுற்றுலாவுக்காக கர்நாடகா மாநிலம் குடகு பகுதிக்கு சுற்றுலா பஸ்சில் புறப்பட்டு சென்றனர். இதில் 3 பேராசிரியர்கள், 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் கல்லூரியில் இருந்து சிறிது தூரத்திலேயே ஒரு வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 30 மாணவ- மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் திருப்பூர் வீரபாண்டி பழவஞ்சிபாளையத்தை சேர்ந்த மணியின் மகள் சுவேதா (வயது 20) என்ற மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோர்களிடம் உடலை ஒப்படைக்க போலீசார் முயன்றனர். ஆனால் சுற்றுலா அழைத்து சென்ற கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். மேலும், அவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, விபத்து தொடர்பாக சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு பஸ் டிரைவரை கைது செய்து உள்ளோம். கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்", என்று போலீசார் உறுதி அளித்தனர். இதில் சமரசம் அடைந்த உறவினர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.