இளம்பெண்ணுக்கு மது வாங்கி கொடுத்த கல்லூரி மாணவருக்கு அடி-உதை

கல்லூரி மாணவரின் விடுதி அறைக்குள் 5 பேர் கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது.

Update: 2024-03-21 02:47 GMT

கோவை,

சேலம் மாவட்டம் சொக்கம்பட்டியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது20).கல்லூரி மாணவர். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வருகிறார். இவர் ஈச்சனாரி-செட்டிபாளையம் ரோட்டில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த விடுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் தங்கி உள்ளனர்.

சவுந்தரராஜன் தங்கி இருந்த அறையின் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரும் தங்கி இருந்தார். அருகருகே உள்ள அறை என்பதால் சவுந்தரராஜனுக்கு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்த இளம் பெண்ணுக்கு அவர் மதுவாங்கி கொடுத்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று சவுந்தரராஜன் அறையில் இருந்தார். அப்போது அங்கு அதே விடுதியில் தங்கியிருக்கும் 5 பேர் கும்பல் அவரது அறைக்குள் புகுந்தனர். அவர்கள் சவுந்தரராஜனிடம் நீ ஏன் அந்த இளம்பெண்ணுக்கு மது வாங்கி கொடுக்கிறாய்? என கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரம் அடைந்த 5 பேர் கும்பல் அறையின் கதவை அடைத்து விட்டு சவுந்தரராஜனை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளினர். கீழே விழுந்த பின்னரும் ஆத்திரம் தீராத அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தகும்பல் அங்கிருந்து தங்கள் அறைக்கு சென்று விட்டனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்த சவுந்தரராஜனை மீட்டு சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சவுந்தரராஜனின் தந்தை அளித்த புகாரின் பேரில் சுந்தராபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கல்லூரி மாணவரை தாக்கியது, பெரம்பலூரை சேர்ந்த மணிகண்டன் (20), சிவகங்கையை சேர்ந்த பாலாஜி (21), தர்மபுரி கரியமங்கலத்தை சேர்ந்த ரூபன்குமார் (20), அபிஷேக் (21), சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த விஷ்ணு (21) ஆகியோர் என்பதும், இவர்களும் அதே கல்லூரியில் பி.டெக் படித்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 5 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்