கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

கோவை பீளமேட்டில் நீலகிரியை சேர்ந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-23 17:07 GMT

கோவை, மே.24-

கோவை பீளமேட்டில் நீலகிரியை சேர்ந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கல்லூரி மாணவி

நீலகிரி மாவட்டம் நாடுகாணியை சேர்ந்தவர் யோகராஜ். இவருடைய மனைவி சசிகலா. இவர்களது மகள் குணசிந்து (வயது 20). சசிகலா கோவையில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனால் அவருடன் தங்கி குணசிந்து கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இவர், தான் தாழ்த்தப்பட்டவர் என்று தெரிந்தால் தன்னுடன் யாரும் பேச மாட்டார்கள் என்று நினைத்து தான் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர் என்று யாரிடமும் கூறவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் அவர் கல்வி உதவித்தொகை கேட்டு கல்லூரியில் விண்ணப்பித்து உள்ளார்.

விஷம் குடித்தார்

அப்போது உதவித்தொகை பெற ஆதார் எண்ணை கொடுக்குமாறு கல்லூரி நிர்வாகம் கேட்டு உள்ளனர். இதையடுத்து குணசிந்து தனது ஆதார் எண்ணை கொடுத்தார். இதையடுத்து அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் தன்னைப்பற்றிய முழுவிவரமும் இருந்தது.

இதைபார்த்த அவர் தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது கல்லூரியில் உள்ள அனைவருக்கும் தெரிந்துவிட்டதோ என்று நினைத்து அச்சம் அடைந்தார்.

அத்துடன் தன்னிடம் யாரும் பேச மாட்டார்களோ, தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்று நினைத்த குணசிந்து வாழ்க்கையில் விரக்தியடைந்து கடந்த 17-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை தண்ணீரில் கலந்து (விஷம்) குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பரிதாப சாவு

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி குணசிந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்