காதல் தகராறில் கல்லூரி மாணவி அடித்துக்கொலை

காரைக்குடி அருகே காதல் தகராறில் கல்லூரி மாணவி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கட்டிட தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2022-09-25 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி அருகே காதல் தகராறில் கல்லூரி மாணவி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கட்டிட தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மாத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. இவரது மகள் சினேகா(வயது 22). இவர் காரைக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு கணிதம் படித்து வந்தார். இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். கட்டிட வேலை செய்து வருகிறார். சினேகாவும், கண்ணனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சினேகாவை திருமணம் செய்து வைக்க கோரி அவரது வீட்டுக்கு ெசன்று கண்ணன் பெண் கேட்டுள்ளார். அப்போது சினேகாவின் பெற்றோருக்கும், கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சினேகாவின் தாத்தாவை கண்ணன் கீழே தள்ளி விட்டதாகவும், அதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

வாக்குவாதம்

இதுகுறித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் கண்ணனை எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்திற்கு பின் சினேகாவுக்கும், கண்ணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு அவர்களது காதலில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கண்ணன், தான் சினேகாவிடம் கொடுத்து வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை தருமாறு ெசல்போனில் கேட்டுள்ளார். இதைதொடர்ந்து அவர், அதை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் மாத்தூர் ரேஷன் கடை அருகே வந்தார். அங்கு மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அடித்து கொலை

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரும்பு கம்பியால் சினேகாவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த சினேகா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

இதைபார்த்த கண்ணன் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். சிறிது நேரத்தில் சினேகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்