கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
பாளையங்கோட்டையில் கல்லூரி பேராசிரியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டையில் கல்லூரி பேராசிரியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம்
பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் கல்லூரி ஆசிரியர் கூட்டு (ஜே.ஏ.சி) நடவடிக்கை குழு சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமையை பாதிக்கின்ற வகையில் பல்வேறு குளறுபடிகளோடு தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரே பொது பாடத்திட்டம் மாணவர்களின் உயர் கல்வியையும், பல்கலைக்கழகத்தின் உரிமைகளையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு மட்டும் மறுக்கப்பட்டுள்ள இணை பேராசிரியர் பணி உள்ளிட்ட பணி மேம்பாட்டை உடனடியாக வழங்க வேண்டும். அரசு ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி பேராசிரியர்களுக்கு எம்.பில்., பி.எச்டி. ஊக்க ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
பேராசிரியர்கள்
உண்ணாவிரத போராட்டத்துக்கு கல்லூரி ஆசிரியர் சங்க மண்டல தலைவர்கள் ஹெய்ஸ் தாசன், சோபன் ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
இதில் பொதுச் செயலாளர் நாகராஜன், மண்டல பொருளாளர்கள் ராஜ ஜெயசேகர், ராஜூ, கோமதி நாயகம், செயலாளர்கள் சிவஞானம், ஜேம்ஸ், துணைத்தலைவர் சைலாகுமாரி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.