ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி;
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தலைமை தாங்கினார். திறன் பயிற்சியாளர் டாக்டர் நிமலன் மரகதவேல் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஏஞ்சலா துரைராஜ் வரவேற்றார். இதையடுத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேசுகையில், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவ, மாணவிகள் நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும். செய்திதாள்கள் படிக்க வேண்டும். தனியார் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிகிழமைகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்பவர்கள் தங்களது கல்வி தகுதிக்கான வேலைவாய்ப்பினை பெறுகின்றனர். ஒரு சிலர் தங்களது தனித்திறன்களை வளர்த்து கொள்ள ஏதுவாக திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர்ந்து பயிற்சிக்கு பின் வேலைவாய்ப்பினை பெறுகின்றனர்.
இதேபோல் சுயதொழில் மேற்கொள்ள விரும்பும் தொழில்முனைவோர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என்று பேசினார். இதனை தொடர்ந்து திறன் பயிற்சியாளர் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தன்னம்பிக்கை குறித்து பேசினார். அப்போது, மாணவ, மாணவிகளிடம் கேள்விகளை கேட்டு சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசு வழங்கினார். இதில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.