மழைக்காக விடுமுறை கேட்ட மாணவனுக்கு டுவிட்டர் மூலம் கலெக்டர் ருசிகர பதில்
மழைக்காக விடுமுறை கேட்ட மாணவனுக்கு டுவிட்டர் மூலம் கலெக்டர் ருசிகர பதில் அளித்துள்ளார்.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாலை நேரத்தில் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் பள்ளி சென்று திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு திரும்பினர்.
இந்தநிலையில் தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு அந்த மாநில அரசு நேற்று முன்தினம் இரவே விடுமுறை அறிவித்தது. இதை தொடர்ந்து இரவு 10.10 மணிக்கு சிவகாசியை சேர்ந்த ஒரு மாணவன், விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டியின் டுவிட்டரில் "சார், சிவகாசியில் மாலை முதல் மழை வந்த வண்ணம் இருக்கிறது. நாளை (அதாவது நேற்று) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை கிடைக்குமா?" என கேள்வி எழுப்பி இருந்தான்.
இதற்கு கலெக்டர் மேகநாதரெட்டி இரவு 10.45 மணிக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது, "விடுமுறை கிடையாது என்பதை சூசகமாக தெரிவித்து, மாலையில் மழையை ரசித்த நீ, நாளை வழக்கம் போல் பள்ளிக்கு செல்" என்று ருசிகரமாக பதில் அளித்து இருந்தார். இந்த பதிலை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.