கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை

கோவில் சுவரை இடிப்பதற்கு எதிர்ப்பு தொிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2023-09-26 00:15 IST

கங்கை அம்மன் கோவில்

கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்கள் கங்கை அம்மன் கோவிலை கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் இந்த கோவில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் உட்பிரகாரத்தில் அனைத்து பரிவார தெய்வங்களும் உள்ளன. இங்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை விரிவாக்கப் பணிக்காக சுமார் 5 அடி அகலத்துக்கு கோவில் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினர் அளவீடு செய்தனர்.

முற்றுகை போராட்டம்

கோவில் அமைந்துள்ள இடத்திலிருந்து வடக்கு புறம் சாலைவரை சுமார் 70 அடி அகலம் உள்ளது. நான்குவழி சாலையின் நடுவில் தடுப்புச்சுவருடன் சுமார் 52 அடி அகல சாலை அமைக்கும்பட்சத்தில் மேற்படி கோவிலை அப்புறப்படுத்தாமல் தார் சாலை அமைக்க வசதியாக பில்லர் சுவர் உள்ளது.

எனவே கோவில் பில்லர் சுவரை அப்புறப்படுத்தாமல் சாலை அமைக்க வலியுறுத்தி கங்கை அம்மன் ஆலய நிர்வாக குழுவினர், ஆலய மகளிர் குழுவினர், ஆட்டோ டிரைவர் சங்கம், சுமை தூக்குவோர் சங்கம், ஒற்றை மாட்டுவண்டி சங்கம் மற்றும் பொதுமக்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட மக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் இருந்த அதிகாரியிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்