வீடுகளுக்கே நேரில் சென்று மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கிய கலெக்டர்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஒவ்வொருவரின் வீடுகளுக்கே நேரில் சென்று மாணவர்களுக்கு சாதி சான்றிதழை வழங்கினார்;

Update: 2022-06-02 20:42 GMT

தஞ்சாவூர்


தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, மெலட்டூர் கிராமத்தில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த 20 குடும்பத்தினர் சாலையோரத்தில் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது குழந்தைகளை படிக்க வசதியாக பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து இருந்தனர்.இந்தநிலையில் இவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று மெலட்டூர் கிராமத்திற்கு சென்றார். அங்கு அவர், இருளர் சமுதாயத்தினரின் ஒவ்வொருவருடைய வீட்டிற்கும் சென்று பள்ளியில் படித்து வரும் இருளர் இன மாணவ, மாணவிகளுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழை வழங்கினார்.

மக்கள் மகிழ்ச்சி

பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறும்போது, இந்த சான்றிதழ் மாணவர்களின் பள்ளி படிப்புக்கும், கல்லூரியில் இடஒதுக்கீட்டில் சேரவும், அரசு வேலையில் சேரவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் இவர்களுக்கு பட்டா வழங்குவதுடன் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்றார். பல ஆண்டுகளுக்கு பிறகு சாதி சான்றிதழ் கிடைத்ததுடன் வீடு கட்டி கொடுக்கப்படும் என உறுதி அளித்ததால் மகிழ்ச்சி அடைந்த இருளர் இன மக்கள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர்.









Tags:    

மேலும் செய்திகள்