ஆத்தூர்:-
ஆத்தூரில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சேதமடைந்த வாழை, மஞ்சள் பயிர்களை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார்.
சூறைக்காற்றுடன் மழை
சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக சில இடங்களில் சூறைக்காற்றுடன் திடீரென மழை பெய்து வருகிறது. ஆத்தூர் அருகே கீரிப்பட்டி பேரூராட்சி பகுதியில் கடந்த 21-ந் தேதி சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. மேலும் மின் கம்பங்களும் சேதமாகின.
இந்தநிலையில் கீரிப்பட்டி பேரூராட்சி பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. மேலும் மஞ்சள் பயிரும் சேதமானது. இதனால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
கலெக்டர் பார்வையிட்டார்
இந்தநிலையில், கீரிப்பட்டி பகுதியில் மழையால் சேதமடைந்த வாழை மரங்களை நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்கும் வகையில் உடனடியாக சேதம் குறித்து கணக்கெடுப்பு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்குமாறு வேளாண்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தினார்.
இதேபோல், மழையால் சேதமடைந்த மஞ்சள் பயிர்களையும் கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.