பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத பட்டாசு கடைகளுக்கு அனுமதியில்லை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தகவல்
பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் பட்டாசு விற்பனை கடைகளுக்கு அனுமதி கிடையாது என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.;
விபத்தில்லா தீபாவளி
ராமநாதபுரத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை கடைகளில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய், போலீஸ் மற்றும் தீயணைப்புதுறை அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- தீபாவளியை விபத்து இல்லாமல் பாதுகாப்பாக கொண்டாடிட பட்டாசு விற்பனை கடைகளில் உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் பட்டாசு விற்பனை கடைகளுக்கு அனுமதி கிடையாது. உரிமம் இன்றி கடைகள் செயல்படக்கூடாது. மாவட்டத்தில் 112 நிரந்தர கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தீபாவளியை முன்னிட்டு தற்காலிக கடைகளுக்கும் அனுமதி வழங்கப்படும்.
தயார்நிலையில்
பட்டாசு கடைகள் தனியாகவும், குடோன் தனியாகவும் இருக்க வேண்டும். அலுவலர்கள் அதனை உறுதி செய்ய வேண்டும். பட்டாசு கடைகளில் நுழைவு வாயில் மற்றும் அவசர வழி என 2 வாசல்கள் இருக்க வேண்டும். பட்டாசு கடை அருகே எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருக்க கூடாது. கடைகளில் தீயணைப்பு உபகரணங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கடைகளில் உள்ள மின் இணைப்பு சரியாக இருக்க வேண்டும். சேதம் அடைந்திருந்தால் உடனே சரி செய்ய வேண்டும்.
பண்டலாக விற்பனை செய்யப்படும் பட்டாசுகளில் லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் மட்டும் விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, தொழிலக பாதுகாப்பு சுகாதார துணை இயக்குனர் கிஷோர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.