சின்னசேலம் அருகே அரசு பள்ளிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
சின்னசேலம் அருகே அரசு பள்ளிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே, எலியத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் தொட்டியம் அரசு மேல்நிலை பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவு தொடர்பாகவும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
நீரேற்றும் நிலையம்
அதன்பின்னர், சின்னசேலம் பேரூராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்திலி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியத்தின் நீர் ஏற்றும் உந்து நிலையத்துக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சின்னசேலம் பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கவும், மின் மோட்டார் மற்றும் நீரேற்றும் உந்து நிலையத்தை பராமரிக்குமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களை அவர் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.