ஏரிகளின் மதகுகளை விரைந்து சீரமைக்க கலெக்டர் உத்தரவு
ஏரிகளின் மதகுகளை விரைந்து சீரமைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழுமத்தூர் ஏரியினை கலெக்டர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கிழுமத்தூர், ஓகளுர், கை.பெரம்பலூர் ஆகிய 3 ஏரிகளுக்காக நபார்டு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.3 கோடி மதிப்பீட்டில் மதகுகள் புதுப்பித்து சீரமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும், என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஆய்க்குடி ஏரியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் உட்புறம் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மற்றும் மதகுகள் புதுப்பித்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் பணிகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும், என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது நீர்வளத்துறை மருதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் தினகரன், குன்னம் தாசில்தார் அனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.