தாளவாடி அருகே மனுநீதி நாள் முகாம்; 211 பேருக்கு ரூ.59¼ லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்

தாளவாடி அருகே நடந்த மனுநீதிநாள் முகாமில் 211 பேருக்கு ரூ.59¼ லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.

Update: 2022-09-14 21:07 GMT

தாளவாடி

தாளவாடி அருகே நடந்த மனுநீதிநாள் முகாமில் 211 பேருக்கு ரூ.59¼ லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

தாளவாடி அருகே சிமிட்டஹள்ளி ரங்கசாமி கோவில் வளாகத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.

முகாமில் வருவாய் துறை சார்பில் 78 பயனாளிகளுக்கு 47 லட்சத்து 16ஆயிரத்து 830 மதிப்பீட்டில் நத்தம் பட்டாக்களையும், 12 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் இணையவழி பட்டா மாறுதல் ஆணையையும், 2 பயனாளிகளுக்கு வன உரிமைச் சட்டம் 2006-ன் படி 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குடியிருப்பிற்கான தனிநபர் உரிமத்தினையும், 14 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணையையும், 63 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளும் உள்பட மொத்தம் 211 பயனாளிகளுக்கு 59 லட்சத்து 22 ஆயிரத்து 348 ரூபாய் மதிப்புள்ள பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கருத்து காட்சி அரங்குகள்

தொடர்ந்து தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் தோட்டக்கலை மற்றும் வேளாண் உழவர் நலத்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கால்நடை பராமரிப்பு துறை, பட்டு வளத்துறை, பொது சுகாதார மற்றும் மருத்துவதுறை, ஊரக ஊராட்சி துறை, மகளிர் திட்டம், ஆகிய துறைகளின் சார்பில் கருத்து காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

பின்னர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் போன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாதத் திருவிழாவை ஒட்டி பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இந்த முகாமில் தாளவாடி ஒன்றிய ஊராட்சி குழுத் தலைவர் ரத்தினமாகாள நாயக்கர், கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி, தனி துணை கலெக்டர் குமரன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் மரகதமணி, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் கோதைசெல்வி, தாளவாடி தாசில்தார் உமாமகேஷ்வரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்