ரூ.1.37 கோடியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

ரூ.1.37 கோடியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-03-12 18:20 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னம் ஊராட்சியில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி (2021-22) திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் குன்னம் பஸ் நிலையத்தினையும், குன்னம் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் ரூ.2 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் கற்பகம் ஆய்வு செய்தார். தொடர்ந்து பெரியம்மாபாளையம் ஊராட்சியில் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் சீராக குடிநீர் வினியோகிக்கப்படுகிறதா? என்பது குறித்தும், அதனை தொடர்ந்து ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆதனூர் கிராம ஊராட்சியில் ரூ.64.67 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், ஆதிதிராவிடர் புதிய காலனி தெருவில் ரூ.21.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலையினையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து கொட்டறை ஊராட்சி வடக்கு தெருவில் ரூ.8.82 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, கொட்டறை நீர்தேக்கத்திலிருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வகையில் வாய்க்கால் அமைப்பதற்காக நில உரிமையாளர்களிடம் மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கொட்டறை நீர்த்தேக்கத்தை சுற்றி உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை பார்வையிட்டும் நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள கரைகளை பலப்படுத்துமாறும், மாவட்ட கலெக்டர் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

வேப்பூர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மொத்தம் ரூ.1.37 கோடி செலவில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வில் மாவட்ட அலுவலர்கள், தாசில்தார்கள், மாவட்ட, ஒன்றிய உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்