வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு
தச்சூரில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான 1583 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1938 வி.வி.பேட் கருவிகள், 2.893 பேலட் யூனிட் ஆகியவை தச்சூர் தேசியநெடுஞ்சாலை பகுதியில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறைக்கு சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில், நேற்று மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை திறந்து காலாண்டிற்கான முதல் தணிக்கையை ஆய்வு செய்தார்.
அப்போது அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பு குறித்தும், எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், தேர்தல் தனி தாசில்தார் சையதுகாதர், கள்ளக்குறிச்சி தாசில்தார் சத்தியநாராயணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், பா.ஜ.க மாவட்ட பொது செயலாளர் ராஜேஷ், தேர்தல் துணை தாசில்தார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.