கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ்விண்ணப்பங்களை கலெக்டர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை நேரடியாக கள ஆய்வு செய்யும் பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி தாலுகா கங்கலேரி ஊராட்சிக்கு உட்பட்ட தவளம் மற்றும் ஆலப்பட்டி கிராமங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களிடம் கள ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் கே.எம்.சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் கலெக்டர் கூறியதாவது:-
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது.
ஒத்துழைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 584 ரேஷன் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெற்ற விண்ணப்ப பதிவு முகாமில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 74 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக 510 ரேஷன் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெற்ற விண்ணப்ப பதிவு முகாமில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 859 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது விண்ணப்பத்தாரர்கள் களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், வருவாய் ஆய்வாளர் ரமாதேவி, கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துராமன், கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.