தூய்மை பணியில் ஈடுபட்ட கலெக்டர்

தலைகுந்தாவில் தூய்மை பணியில் கலெக்டர் ஈடுபட்டார்.

Update: 2023-06-10 21:45 GMT

ஊட்டி

ஊட்டி அருகே தலைகுந்தாவில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்து குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டார். முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு கையுறை, குப்பைகளை சேகரிக்கும் சாக்குப்பை வழங்கப்பட்டன. இதில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக சேகரித்தனர். இவர்கள் சாலையோரம், வனப்பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் குப்பைகளை சேகரித்து மூட்டையாக கட்டி வைத்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 3 டன் குப்பைகள் சேகரித்து அகற்றப்பட்டன.

முன்னதாக கலெக்டர் அம்ரித் கூறுகையில், பொதுமக்கள் தூய்மையை கடைப்பிடித்தால் மட்டுமே நோய் தொற்றுக்கு ஆளாகாமல் தப்பிக்க முடியும். மேலும் பொது இடங்கள், சுற்றுலாத்தலங்கள், கோவில்களுக்கு செல்லும் பொதுமக்கள் என் குப்பை என் பொறுப்பு என்ற முறையில் குப்பைகளை அதற்குரிய தொட்டியில் மட்டுமே போட வேண்டும். மேலும் குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றார். இதில் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, பேருராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா, ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், நந்தகுமார், உல்லத்தி ஊராட்சி தலைவர் சந்தோஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்