அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல் எனும் புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கலந்துரையாடலில் கலெக்டரிடம் மாணவ-மாணவிகள் எதிர்கால லட்சியம், கோரிக்கைகளை தெரிவித்தனர்.;

Update: 2023-08-30 18:20 GMT

கலந்துரையாடல்

அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடும் "காபி வித் கலெக்டர்" எனும் நிகழ்ச்சி புதியதாக புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி முதன் முதலாக இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 30 பேருடன் கலெக்டர் மெர்சி ரம்யா கலந்துரையாடினார். அப்போது மாணவ-மாணவிகள் ஒவ்வொருவராக பேசி தங்களது எதிர்கால லட்சியத்தை கூறினர். இதில் கலெக்டர், ஐ.பி.எஸ்., போலீஸ், விஞ்ஞானி, டாக்டர், என்ஜினீயர், மியூசிக்கல் டைரக்டர் ஆவது என ஒவ்வொருவர் தங்களது லட்சியத்தை கூறினர்.

காலை உணவு திட்டம்

இதைத்தொடர்ந்து வேறெதும் கோரிக்கைகள் உள்ளதா? என கேட்கப்பட்ட போது, மாணவ-மாணவிகள் தெரிவிக்கையில், பள்ளிக்கு பஸ் வசதி, பள்ளியில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டுள்ளதை சரி செய்ய வேண்டும், பள்ளியின் பின்புறத்தில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும், குரங்குகள் தொல்லையை போக்க வேண்டும். காலை உணவு திட்டத்தை 8-ம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை தெரிவித்தனர். இதற்கு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

கலெக்டர் அலுவலகம்

அதன்பின் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் துறைகளின் அலுவலகத்தை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ராம்கணேஷ் (புதுக்கோட்டை), ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்