அரசு பள்ளி, மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு
போடி அருகே அரசு பள்ளி, மாணவர் விடுதியில் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்;
போடி அருகே மேலசொக்கநாதபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு செய்தார். ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வருகை பதிவேட்டை பார்வையிட்ட கலெக்டர், மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்கு சமைக்கப்பட்ட மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்தார். பள்ளியில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு செய்தார். பின்னர், ரெங்கநாதபுரத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அங்கு அடிப்படை வசதிகள் மற்றும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் அதே ஊரில் உள்ள அங்கன்வாடி மையத்திலும் கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் போ.மீனாட்சிபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். அதுபோல் போ.மீனாட்சிபுரம், மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் ராஜாராம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.