ரேஷன் கடை, அரசு பள்ளிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

வாணியம்பாடி மற்றும் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் பள்ளிகளில் கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.;

Update: 2022-12-08 17:41 GMT

வாணியம்பாடி மற்றும் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் பள்ளிகளில் கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் ரேஷன் கடையில் பொது மக்களுக்கு வழங்குவதற்காக இருப்பில் வைக்கப்பட்டுள்ள ரேஷன் பொருட்களின் விபரங்கள் மற்றும் தரம் குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் உங்களுக்கான ரேஷன் பொருட்கள் சரியான நேரத்தில், தங்குதடையின்றி வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். மேலும் இருப்பில் வைக்கப்பட்டுள்ள பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு, பாமாயில் மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் எடைகள் சரிபார்த்தார்.

தொடர்ந்து நாட்டறம்பள்ளி வட்டம் டி.வீரப்பள்ளியில் பகுதிநேர ரேஷன் கடையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள குடிமைப் பொருட்களின் விபரங்கள் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து, பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு, கோதுமை, பாமாயில் மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் எடைகளை சரிபார்த்தார்.

படித்துக்காட்ட கூறினார்

பின்னர் எக்லாஸ்புரம் அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் 3 மற்றும் 4-ம் வகுப்பு மாணவர்களை அழைத்து ஆங்கில பாடத்தை படித்து காண்பிக்க கூறினார். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கிறதா என மாணவரிடம் கேட்டு அறிந்தார். பின்னர் மாணவர்களுக்காக தயார் செய்யப்பட்ட மதிய உணவினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பார்வையிட்டபோது அங்கு மின்சாரம் இல்லாதது தெரிந்தது, உடனடியாக மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து திம்மாம்பேட்டை கால்நடை மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள பதிவேடுகள், மருந்து மாத்திரைகள் இருப்புகள் குறித்து கேட்டு அறிந்தார்.

இந்த ஆய்வின்போது வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்