தேனி புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய தேனி புதிய பஸ் நிலையத்தில் கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு செய்தார்.;

Update: 2023-02-13 19:00 GMT

கலெக்டர் திடீர் ஆய்வு

தேனி புதிய பஸ் நிலையத்தில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. மக்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றவை ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வந்தன. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு பெயரளவில் ஒரு நாள் மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதோடு புதிதாக பல ஆக்கிரமிப்புகள் பெருகி உள்ளன.

இந்நிலையில், மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேற்று காலையில் புதிய பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, பஸ் நிலையத்தில் பல இடங்களில் மக்களுக்கு இடையூறாக தனியார் பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. அவற்றை பார்த்த கலெக்டர், உடனடியாக அனைத்து வாகனங்களுக்கும் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

பின்னர், பஸ் நிலையத்தில் மேற்கூரை சேதம் அடைந்து இருப்பதையும், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து நடைபாதையில் மக்கள் நடக்க முடியாமல் இருப்பதையும் பார்த்து, உடனடியாக மேற்கூரையை சரி செய்யவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அபராதம்

கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து தேனி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பஸ் நிலைய வளாகத்தில் மக்களுக்கு இடையூறாகவும், விதிகளை மீறியும் நிறுத்தப்பட்டு இருந்த 5 தனியார் பஸ்கள், 12 கார்கள், 3 ஆட்டோக்கள், 210 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 230 வாகனங்களுக்கு தலா 500 வீதம் அபராதம் விதித்தனர். இதில், மக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் போலீசாரின் இரு சக்கர வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது, வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் நடராஜன், நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்